சென்னை ரசிகர்களாள் பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுவர், இம்ரான் தாஹிர். வலது கை லெக் ஸ்பின்னரான அவர், தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு பெரும்பாலான வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், 132 ரன்கள் இலக்குடன் ஆடிய மும்பை அணி, சூர்யகுமார் யாதவின் பொறுப்பான ஆட்டத்தால் 18.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இதனால், மும்பை அணி ஐந்தாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இப்போட்டியில், சென்னை அணிக்கு ஆறுதல் தரும் விதமாக இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். தாஹிர் வீசிய 14ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில், மும்பை வீரர் இஷான் கிஷான் 28 ரன்களில் க்ளின் போல்ட் ஆனார். அவரைத் தொடர்ந்து, வந்த குருணல் பாண்டியா அடுத்த பந்துலேயே தாஹிரிடம் கேட்ச் தந்து டக் ஆவுட் ஆனார்.
இந்த விக்கெட் மூலம், இம்ரான் தாஹிர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தனது 247ஆவது டி20 போட்டியில் அவர் இந்த பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இச்சாதனையை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன், வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப்-உல்-ஹசன் ஆகியோர் எட்டியுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் இம்ரான் தாஹிர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர், 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.