கோடை விடுமுறை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்னேசியன் மலர்களை கொண்டு 22 அடி உயரத்தில் பிரமாண்ட நாடாளுமன்றக் கட்டிடம் வடிவமைக்கபட்டுள்ளது. அதேபோல், 50 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு 123-வது மலர் கண்காட்சி என்ற வடிவம் உருவாக்கபட்டு காட்சிக்கு வைக்கபட்டடுள்ளது. பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்காக கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களான தோடர், இருளர், குரும்பர், கோத்தர், பனியர் ஆகிய நடனங்களும், படுகர் இனத்தவரின் நடனங்களும் இடம்பெற்றிருந்தது.
பழங்குடியின மக்கள் நடனமாடும் போது அவர்களின் இசைக் கருவிகளை வைத்து தாங்களாகவே ஒளி எழுப்பியும், அவர்களின் மொழியில் பாடிக் கொண்டும் நடமாடியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை மட்டுமே கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், இதுபோன்று பழங்குடியினரின் நடனத்தை காண்பது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.