நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கத்தரிப்புலம் செண்பகராய நல்லூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ஜெகதாம்பாள் ஜூலை 1-ல் காலமானார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஜெகதாம்பாள் கிறிஸ்தவ சபை ஒன்றில் சேர்ந்து, கிறிஸ்தவராக மதம் மாறினார். இதனால், இவரது உடலை எரியூட்ட விரும்பாத அவரது உறவினர்கள், கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால், செண்பகராய நல்லூரில் உடலை புதைப்பதற்கான கிறிஸ்துவ இடுகாடு இல்லாததால், நாகையில் உள்ள கிறிஸ்தவ சபை நிர்வாகிகள் அவரது உடலை சவப்பெட்டியில் வைத்து, நாகை எடுத்துவர கூறியுள்ளனர்.
இதனையடுத்து உடலை அவரது உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து, நாகையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடுகாடு கொண்டு வந்துள்ளனர். நாகை நகராட்சி இடுகாட்டில் பொதுவாக இறந்த இந்துக்களின் உடல்கள் மட்டுமே எரிக்கவும் புதைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனத்தெரிகிறது.
இந்நிலையில் நாகை இடுகாட்டில் இந்துவாக இருந்து மதம் மாறியவரின் உடல், கிறிஸ்தவ முறைப்படி ஜெபம் செய்து புதைக்கப்பட உள்ளதாக தகவல் அறிந்து, அங்கு திரண்ட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அங்கு உடலை புதைக்க எதிர்ப்புத் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகப்பட்டினம் நகர காவல் நிலைய ஆய்வாளர் கிறிஸ்தவ சபை நிர்வாகிகள், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இறந்தவர் உடலை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டுமானால், கிறிஸ்தவ கல்லறைத்தோட்டம் எடுத்துச் சென்று, அடக்கம் செய்ய அறிவுறுத்தியதையடுத்து, உறவினர்கள் ஜெகதாம்பாளின் உடலை சவப்பெட்டியுடன் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.