மும்பை (மகாராஷ்டிரா): சீனாவின் ஹேக்கர்கள் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வங்கித் துறைகளில் ஊடுருவ கடந்த 5 நாட்களில் 40 ஆயிரம் முறை சைபர் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக காவல்துறையின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாட்டுக்கும் இடையேயான அசாதாரண சூழல்களுக்கு இடையில் சீன ஹேக்கர்கள் இதுபோன்ற தகவல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக மகாராஷ்டிரா சைவர் பிரிவின் காவல்துறை தலைவர் யஷ்ஷாஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த சைபர் தாக்குதல்களில் பெரும்பாலானவை சீனாவின் செங்குடு பகுதியிலிருந்து நிகழ்த்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 4 முதல் 5 நாட்களில், குறைந்தது 40 ஆயிரத்து 300 முறை இந்த சைபர் தாக்குதல்களை நடத்த ஹேக்கர்கள் முயற்சித்திருப்பது அம்பலமாகியுள்ளது.
எனவே, இணைய பாதுகாப்பை அனைத்து தரப்பு நிறுவனங்களும் உறுதி செய்து கொள்ளுமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.