சுருக்குமடி வலையைத் தடை செய்ய வேண்டும் என ஒரு தரப்பினரும், அதனைப் பயன்படுத்திக் கடலில் மீன் பிடித்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினரிடையேயும் எழுந்து வரும் போராட்டம் என்பது, நாகை மாவட்டத்தில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இப்பிரச்னை தொடர்பாக நாகை மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, பல்வேறு கிராமங்களில் போராட்டங்கள் மூலம் கலவரம் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து மாவட்ட அனைத்துக் கடலோர கிராமங்களிலும் பாதுகாப்புப் பணியைப் பலப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நாகை துறைமுகத்தில், சுருக்குமடி வலைகளைத் தடை செய்வது குறித்து நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர் மற்றும் நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 48 மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், சுருக்கு வலை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மீன் வளத் துறை, மீனவர்கள் பேச்சுவார்த்தை மூலம் இறுதி முடிவு எடுக்கும் வரை, அரசுக்கு ஆதரவு அளித்து, நாகை, காரைக்கால், மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, இரட்டைமடி வலை, அதிவேக இன்ஜின்கள் பயன்படுத்தக் கூடாது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.