உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாட்டளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 2 ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டும், 34 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் தங்களை இணைத்து பணியாற்றுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த பொன்னேரி காந்திநகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, கோவிட்-19 நோயிலிருந்து பாதுகாக்கும் கபசுரக் குடிநீரை மகளிர் சுய உதவிக் குழுக்கள் வழங்கினர். பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தகுந்த இடைவெளியை முறையாக பின்பற்றி, முகக் கவசங்களை அணிந்து கொண்டு வரிசையாக வந்து கபசுரக் குடிநீரை வாங்கி பருகினர்.
இந்திரா மகளிர் குழு, வெண்ணிலா மகளிர் குழு, கலைமகள் மகளிர் குழு ஆகிய மூன்று மகளிர் குழுக்கள் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தடபெரும்பக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு , துணைத் தலைவர் சபிதா பாபு, ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு செயலாளர் சுகுணா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சித்த மருத்துவ மூலிகை தொகுப்பாலான இந்த கபசுரக் குடிநீரை கரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது கவனிக்கத்தக்கது.