கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக மக்கள் தொகை தினமான இன்று (ஜூலை 11) மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து அரசு துறை, மருத்துவ அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உறுதி மொழியை ஆட்சியர் படிக்க அலுவலர்கள் ஏற்றுக் கூறியதாவது, "நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.
சிறுகுடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையைத் தடுத்தல், இளம் வயது திருமணத்தைத் தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தைத் தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்.
மேலும் குடும்ப நலத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றியடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும். ‘ தன்னம்பிக்கையும், தற்சார்பும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு நெருக்கடியான சூழலிலும் குடும்ப நல திட்ட சேவைகளை வழங்குவதை உறுதி செய்வோம் என மருத்துவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்), அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.