சீனாவின் வுஹான் மகாணத்தில், கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், வைரஸ் பரவ தொடங்கிய சீனாவில் இதன் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 13 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பெய்ஜிங்கில் அதிகபட்சமாக 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டத்தை தொடர்ந்து, அங்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 20லட்சத்து 43 ஆயிரம் மக்கள் தொகைக் கொண்ட பெய்ஜிங் நகரில், 30 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்தியதன் மூலம் தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சீனாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 398 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.