ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து விநாயகர் சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாட்டில் மண், பித்தளை, இரும்பு, கருங்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மூலம் சிலைகள் வடிவமைக்கப்பட்டாலும் சமீப காலமாக சிந்தடிக் மார்பிள் ( மார்பிள் கல் பவுடர்) மூலம் செய்யப்படும் சிலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
பார்த்திபனூரில் சிந்தடிக் மார்பிளை பயன்படுத்தி கலைநயம் மிக்க பல்வேறு சிலைகள் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
சிலைகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லட்சுமி விநாயகர், குபேர விநாயகர், ஊஞ்சல் விநாயகர் உள்ளிட்ட பலவகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.அரை அடியில் இருந்து மூன்று அடி வரை சிலையின் உயரம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு சிலையின் அளவு, எடை, உயரம் ஆகியவற்றை பொருத்து ரூபாய் 500 முதல் 50 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக நான்கு மாதங்களாக வேலையின்றி தொழிலாளர்கள் இருந்த நிலையில் தற்போது முகக்கவசம், தகுந்த இடைவெளியை பின்பற்றி சிலைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்திக்கு 10 நாள்கள் முன்பாக சிலைகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.