கரோனா ஊரடங்கால் சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் உணவகங்கள் திறக்கப்படவில்லை. இதனால் பலரும் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சாலையோரங்களில் வீடின்றி ஆதரவற்ற நிலையில் பசியால் வாடுவோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுத்து உதவுகின்றனர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் விடுதியில் 100 மருத்துவ பட்ட மேல்படிப்பு மாணவர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் உணவு உட்கொள்ளும் விடுதி உணவகத்தில் ஆர்டர்செய்யும் காலை உணவை தங்களது வாகனம் மூலம் எடுத்துச் சென்று அப்பகுதியில் பசியுடன் படுத்திருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், தண்ணீரை கொடுக்கின்றனர்.
இச்சேவையை ஊரடங்கு காலம் முடியும்வரை தங்களால் இயன்ற அளவிற்கு தினந்தோறும் செயல்படுத்தப்போவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஆதரவற்றவர்களைத் தேடிச்சென்று தங்களது சொந்த செலவில் உணவளிக்கும் இந்த மருத்துவ மாணவர்களின் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது.