திருப்பூர் மாவட்டத்தில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் மூலம் கிராமங்களில் விவசாயிகள் கறவை மாடுகள், எருமைகள் மூலம் உற்பத்தியாகும் பாலை தினசரி காலை, மாலை கொள்முதல் செய்து திருப்பூர் ஆவின் நிறுவனத்துக்கு கொடுத்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் லிட்டர் பால்கொள்முதல் நடைபெற்று வருகிறது.
தற்போது திருப்பூர் ஆவின் நிர்வாக மேலாளர் உத்தரவிட்டுள்ளதாக கூறி தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள், தினசரி 20 சதவீத பாலை குறைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி இன்று (ஜூலை23) முதல் பால் கொள்முதலை நிறுத்தியுள்ளனர்.
இதனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று கொண்டுவந்த 20 சதவிகித பாலை சங்கத்தில் பெறாமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.
குறிப்பாக ஊத்துக்குளி வட்டம், சேடர்பாளையம் தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தில் இவ்வாறு நடந்துள்ளது. இந்தக் கரோனா காலத்திலும் விவசாயிகள் சிரமத்திற்கு மத்தியில் பால் உற்பத்தி செய்து தருகிறார்கள்.
தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள இந்த விவசாயிகளுடைய பாலை வாங்க மறுப்பது, அத்துடன் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் பால் கொள்முதலை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
பால் உற்பத்திக்கு தேவையான கலப்புத்தீவனம், தவிடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு அனைத்தும் விலை உயர்ந்து விட்ட நிலையில், ஏதோ அன்றாட ஜீவனத்துக்கு என்று இந்த பால் உற்பத்தி இருந்த நிலையில், பாலை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனை அளித்துள்ளது.
மேலும் ஆவின் மூலமாக வழங்குகிற கலப்புத்தீவனத்திற்கு வழங்கிய மானியத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு பாலை முழுவதுமாக கொள்முதல் செய்ய வேண்டும்.
20 சதவிகிதம் திருப்பி அனுப்புகிற உத்தரவை வாபஸ் பெற வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கொள்முதல் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும், கொள்முதல் செய்யும் பாலுக்கு உடனுக்குடன் பணப் பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மின்சார திருத்தச் சட்டத்தை கண்டித்து விவசாயிகள் கையெழுத்து இயக்கம்!