மக்களவை மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
மக்களவையில் 3 வேளாண்மை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதில் இரண்டு முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வி.எஸ். கலியபெருமாள் தலைமையில் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, விவசாயிகள் நுகர்வோருக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்த கருப்புச்சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்ட திட்டங்கள் அடங்கிய வரைவு மசோதா நகலை தீயிலிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.