பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. மாவட்டத்திற்கு கரோனா தடுப்புப் பணி ஆய்வுக் கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதரும் நாளில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
2. பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வெட்டிய கரும்புக்கு மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலை பாக்கி தொகை, 2019-20ஆம் ஆண்டுக்கு கரும்பு விலை மாநில அரசு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
3. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் நலத் திட்டங்களான பிரதமர் கிசான் நிதி உதவித் திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம், மக்காச்சோளத்துக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கும் திட்டம், கிணறு வெட்டும் திட்டம், மாட்டுக் கொட்டகை வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.