திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர். இவருடைய மகன்கள் மகேஸ்வரன் (15), மனோஜ் (17) ஆகிய இருவரும் அருகிலிருந்த தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது ஒப்பந்த மின்வாரிய ஊழியர் ஒருவருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அச்சமயம் அவ்வழியாக வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அழகர்சாமி, முத்துச்சாமி வெங்கடாசலம், சீனி சுப்பிரமணியன், கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து எஸ்தரின் மகன்கள் இருவரையும் தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அழகர்சாமி தலைமையில் ஐந்து நபர்களும் சாணார்பட்டி காவல் நிலையத்தில் மனோஜ், மகேஸ்வரன் மீது புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் அழகர்சாமி, எஸ்தரின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பணம் கொடுக்காவிட்டால் வேறு நபர்கள் மூலமாக அவருடைய மகன்கள் மீது மீண்டும் புகார் அளிப்போம் எனவும் மிரட்டியுள்ளனர். இதை எஸ்தரின் கணவர் ஜான்சன் எதிர்த்துக் கேட்டதால், அவர் மீதும் மகன்கள் மீதும் இன்னொரு நபர் மூலமாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் எஸ்தர் தன்னை பொய் புகார் அளித்து மிரட்டிவரும் அழகர்சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர், காவல்த கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.