திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வன சரக்கத்திற்கு உட்பட்டது சின்னபுத்தூர். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காய் கறிகள், மாட்டுத் தீவனங்கள், பயிர் வகைகள் ஆகியவைகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். இதனிடையே, அப்பகுதியில் சுற்றித் திரியும் மயில்கள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தன.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக காங்கேயம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சேமலையப்பன் என்பவரது நிலத்தில் 11 மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறை அலுவலர்கள், சேலையப்பனிடம் விசாரணை நடத்தினர். அதில், 11 மயில்களை விஷம் வைத்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், மயில்களை கொன்றதற்காக வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேமலையப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
