உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொண்டது. செஸ்டர் லீ ஸ்ட்ரீட், ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 203 ரன்களுக்கு சுருண்டது.
இதைத்தொடர்ந்து, 204 ரன்கள் இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் மலிங்காவின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 4.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 31 ரன்களை எடுத்திருந்ததால், இப்போட்டியிலும் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்துவிடுமோ என அவரது ரசிகர்கள் நினைத்தனர்.
இந்த தருணத்தில் அம்லா உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டூப்ளஸிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், இதுவரை இந்தத் தொடரில் பெரிய அளவில் சோபிக்காத அம்லா இந்தப் போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். இருவரும் 175 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டதால், தென்னாப்பிரிக்க அணி 37.2 ஓவர்களில் 204 ரன்களை எட்டியது. இதனால், தென்னாப்பிரிக்க அணி இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டூப்ளஸிஸ் 96 ரன்களுடனும், அம்லா 80 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தத் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த வெற்றி தற்போது ஆறுதலை வழங்கியுள்ளது.