கன்னியாகுமரி மாவட்டம், வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்தவர் நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு இவரது முகநூலில் ஜோஸ் என்ற இளைஞரிடம் இருந்து நட்பு அழைப்பு வந்தது. அதை நித்யாவும் ஏற்று ஜோசுடன் நட்பாக பழகியுள்ளார். பின்னர் அவரது செல்ஃபோன் எண்ணை பெற்று அவருடன் பேசி வந்துள்ளார். இவர்களுக்குள் நட்பு இறுகியதும் அந்த இளைஞருடன் சேர்ந்து நித்யா சில இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞர் நித்யாவிடம், தான் நாகர்கோவில் பகுதியில் பெட்ரோல் பங்க் திறந்து நடத்த இருப்பதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கேட்டுள்ளார்.
இதற்கு முதலில் நித்யா மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் நகைகளை கொடுக்க நித்யா முன்வந்துள்ளார். இதனால், ஜோஸ் தனது காரில் வேர்கிளம்பிக்கு சென்று நித்யாவை அங்கிருந்து அழைத்துக்கொண்டு நாகர்கோவில் வந்துள்ளார்.
அப்போது, நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கவரிங் நகை கடைக்கு அழைத்துச் சென்று கவரிங் நகைகளை வாங்கி நித்யாவுக்கு அணிய கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அவரிடமிருந்து செயின், வளையல் உள்பட 10 சவரன் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்தில் நிற்குமாறும் நகைகளை அடகு வைத்துவிட்டு வந்து அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய நித்யா பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் ஜோஸ் திரும்ப வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நித்யா அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அவர் சுசீந்திரம் பகுதியில் உள்ள தனது சகோதரிக்கு தொடர்புகொண்டு அவரை வரவழைத்து இருவரும் சேர்ந்து ஜோசை தேடியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.