புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்கலத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இடையாத்திகுளத்தில் உள்ள பெரிய குளம் மூலமாக 1200 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்தாண்டு 94 லட்சத்து 49 ஆயிரத்து 433 ரூபாய்க்கு இடையாத்திமங்கலம் ஏரி பாசனதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீரை பயன்படுத்துவோர் சங்கத்தினரிடம் எவ்வித கருத்தும் கேட்கப்படவில்லை. இது குறித்து அலுவலர்களிடம் கேட்டபோதும் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், இடையாத்திமங்கலம் ஏரி பாசனதாரர் சங்க தலைவர், குளத்திலுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே சட்டப்படி நீரை பயன்படுத்துவோர், சங்கத்தை ஆலோசிக்காமல் பெரிய குள குடிமராமத்து பணியை வழங்கிய தஞ்சாவூர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு, புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்கலம் பெரியகுளத்தின் குடிமராமத்து பணியை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும், அறந்தாங்கி சார்பு நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறைக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.