கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் தளர்வளித்துள்ளன. இந்த கடும் கட்டுப்பாடுகள் காரணமாக காய்கறி, பூ சந்தைகளும் பல இடங்களில் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, பூக்கடை சந்தைகள் மூடப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டதால் பூக்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் பூக்களின் விலையும் சரிந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சம்பங்கிப்பூக்கள் அதிகளவில் மகசூல் செய்யப்படுகிறது. கிலோ ரூ.150 வரை விற்கப்பட்டுவந்த சம்பங்கிப்பூ தற்போது விற்கமுடியாமல் கருகி வீணாகி வருகிறது.
ஈரோடு - கோவை இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் வாசனை திரவிய ஆலைக்கு சம்பங்கிப்பூக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது. சம்பங்கிப் பூக்களை செடியிலேயே விட்டுவிட்டால் செடியும் பாதிக்கும் என்பதால் பூக்களை பறித்து பெரியகுளம் குட்டையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய சத்தியமங்கலம் பூ விவசாயிகள், "பூ விவசாயத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். ஊரடங்கு காரணமாக எங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பறிபோய்விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் பூக்களை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இதுவரை ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில், தமிழ்நாடு முழுவதும் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு, பூக்கள் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் கரோனா பரவல் காரணமாக பூ விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.