ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் கரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ராஜாஜிபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆகியோர் அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 26 இடங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட எல்லைகளில் மிக தீவர கண்காணிப்பு நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக இ-பாஸ் இருப்பவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாமக்கல், கரூர் மாவட்டங்களிலிருந்து தினசரி வேலைக்கு சென்றுவருபவர்களை தொழிற்சாலைகள் நிர்வாகத்தினரே தங்க வைக்க பேசி வருகிறோம். ஒரு சிலருக்கு தினசரி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா பாதிப்பு என்பது வெளி மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் மூலமாக மட்டுமே அதிகரித்துள்ளது.
இ-பாஸ் உடன் வருபவர்களுக்கு கட்டாயமாக பி.சி.ஆர்.சோதனை எடுக்கப்படும். தற்போதுவரை ஈரோட்டில் 124 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கரோனா!