டெல்லி: மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 18 இடங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக இருந்த 55 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், 10 மாநிலங்களில் இருந்து 37 பேர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆந்திரா, குஜராத் உள்பட எஞ்சிய 18 இடங்களுக்கு, மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இடையில் கரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தத் தேர்தலுக்கான புதிய அட்டவணையைத் தலைமை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களுக்கு, ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, உடனடியாக முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.