ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ் பிரபு (22) என்பவர், அப்பகுதியில் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும் 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாணவியைக் காதலிப்பதாகக் கூறி அவரை முனீஸ் பிரபு கர்ப்பமாக்கியுள்ளார்.
இதனையடுத்து மாணவி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு, முனீஸ் மறுப்பு தெரிவித்து, கருவைக் கலைக்குமாறு கூறியுள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவிக்க, அவர்கள் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரிபேரில் முனீஸ் பிரபு மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடிவருகின்றனர்.