திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள வேதாத்திரி நகரில் 200 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள கழிவுநீர் கால்வாயின் மீது பாலம் அமைப்பதற்காக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சார்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கால்வாயை அடைத்து வேதாத்திரி நகர் செல்லும் சாலைகளை உடைத்து கழிவுநீரை மாற்றுப் பாதையில் ஊராட்சி நிர்வாகத்தினர் செலுத்தினர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாலம் வேலை முழுவதுமாக முடிவடைந்தது. ஆனால், தற்போது வரை கழிவுநீரை மண் கொண்டு அடைத்து இருந்ததை எடுக்காததால் அப்பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளது.
அதேபோல் வீட்டு குடியிருப்பு முன்பும் கழிவு நீர் தேங்கியுள்ளதால், 24 மணி நேரமும் அதிக அளவு கொசு தொல்லை ஏற்படுகிறது. ஏற்கனவே, கரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் கூறிவரும் நிலையில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.