மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஜீவன் கலந்துகொண்டு, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து சுகாதார பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், 500 பேருக்கு பொன்னாடை அணிவித்து முகக்கவசம், கையுறை, பண முடிப்பு உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கி கீதாஜீவன் எம்எல்ஏ கவுரவித்தார். பின்னர் 1,200 கரோனா முன்களப் பணியாளர்களுக்கு காலை, மதியம் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கீதாஜீவன் எம்எல்ஏ தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.