கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக மாநில அரசுகள் அறிவித்தன.
இருப்பினும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா பாதிப்புத் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இருந்தபோதிலும், தமிழ்நாடு அரசு, ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதிபட அறிவித்திருந்தது.
தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாநில அரசை சரமாரியாக கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள திமுக எம்.பி., கனிமொழி, 'பத்தாம் வகுப்புத் தேர்வை உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் நடத்தத் துடிக்கும் அரசுக்கு, தனது கேள்விகளால் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். தேர்வை நடத்துவதில் ஏன் இவ்வளவு அவசரம் என்றும், மாணவர்கள் பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது என்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளை இன்று (ஜூன் 8) நீதிமன்றமும் கேட்டிருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.