மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, குமரி மாவட்டத்திலும் மொத்தம் 44 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில், கலந்துகொண்ட 100 பேர் மீது நேசமணி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், தேரூரில் ஆஸ்டின் எம்எல்ஏ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தக்கலையில் மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையிலும், குளச்சலில் பிரின்ஸ் எம்எல்ஏ, கருங்கல்லில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையிலும் போராட்டங்கள் நடந்தன.
இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் போராட்டம் நடத்திய ஐந்து எம்எல்ஏக்கள் உள்பட இரண்டாயிரத்து 600 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் கரோனா தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.