ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே உள்ள குந்துகாலில் 70 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து வீர ராகவ ராவ் பேசியதாவது; 'தமிழ்நாடு அரசு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில், குந்துகால் பகுதியில் 70 கோடி மதிப்பில், புதிதாக மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இம்மீன்பிடி இறங்கு தளமானது, சுமார் 500 விசைப்படகுகளை நிறுத்திட ஏதுவாகவும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சேமித்து வைத்திட குளிர்பதன சேமிப்புக் கிடங்கு வசதிகள், சாலை வசதிகள், மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. விரைவில் 100 விழுக்காட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மீனவர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். மேலும், மீன்பிடி இறங்குதளம் அமைப்பதனால், இப்பகுதியில் கடல் மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், புதிதாகத் தூண்டில் வளைவு அமைப்பதற்கு 1.87 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தூண்டில் வளைவானது 315 மீட்டர் நீளம், 1.60 மீட்டர் உயரம் அளவிற்கு அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2020 ஜுன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது' இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் உடனிருந்தனர்.