கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர், சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று (ஜூன் 1) முதல் கடலூரில் 50% பயணிகளுடன் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது.
இதனை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் பேருந்து நிலையம் சென்று இன்று (ஜூன் 2) ஆய்வு செய்தார். கடலூர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காய்கறிக் கடைகள், கடலூர்-சிதம்பரம் செல்லும் சாலையில் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் காய்கறி சந்தையைப் பார்வையிட்ட பின்னர், சிதம்பரம் செல்வதற்காக காரில் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சித்திரப்பாவை என்ற பெண், அவரது மகன் சுஜித் உடன் இருசக்கர வாகனத்தில் கோ-ஆப்டெக்ஸ் கடை அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு கார் எதிர்பாராத விதமாக, அப்பெண்ணின் இருசக்கர வாகனத்தில் மோதி நிற்காமல் சென்றது. இதனால் நிலைதடுமாறி, இருவரும் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.
அப்போது சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், அவர்களை மீட்டு வட்டாட்சியர் செல்வகுமாரின் காரில், கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ரகுநாதன் ஆகியோர் அந்த இருவரையும் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து முதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அச்சமயம் விபத்தில் சிக்கிய தாயையும், மகனையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியரின் செயலை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.