ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பொதியா மூப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சோமு. கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரும் இவரது மனைவி பழனியம்மாளும் கரோனா ஊரடங்குக்கு முன்னதாக அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஊதுவத்தி, கற்பூரங்களை வீடு வீடாகவும், கடை கடையாகவும் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். விற்பனை செய்து அதில் கிடைத்த லாபப் பணத்தை தனது தாயாரிடம் கொடுத்து சேமித்து வந்துள்ளார்.
கரோனா காலத்தில் செலவுக்குப் பணமில்லாமல் 20 நாள்களாகத் தேடி சேமிப்புத் தொகையைத் கண்டுபிடித்த அவர் தன்னிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் 24 ஆயிரம் ரூபாய் இருந்ததைத் தெரிந்து கொண்ட அவர் அப்பணத்தை மளிகைக் கடைக்காரரிடம் கொடுத்த போது அவர் இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கபட்டுள்ளதாக தெரிவித்ததால் கடும் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வழங்கிட வேண்டுமென்று சோமு கோரிக்கை விடுத்தார். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனுக்குத் தெரிய வந்ததையடுத்து அவர் வட்டாட்சியர் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
பின்னர் அவரிடமிருந்து பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக்கொண்டு மாவட்ட முன்னோடி வங்கி அலுவலரிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தனது சொந்த நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாற்றுத்திறனாளி சோமு, அவரது மனைவி பழனியம்மாளிடம் வழங்கினார்.