கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயலாளர் சுனில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "களியக்காவிளையில் தினசரி சந்தை நடைபெறுவது வழக்கம். இதன்மூலம் விவசாயிகள் பெரும் அளவில் பயன் அடைகிறார்கள். இந்த தினசரி சந்தையில் காய்கள், மீன்கள், கால்நடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் கடைகளில் கட்டணம் வசூல் செய்வதற்கு நகர் பஞ்சாயத்து மூலம் ஏலம்விடப்படுகிறது. ஆனால் ஏலம் எடுப்பவர் நகர் பஞ்சாயத்து நிர்ணயம் செய்த தொகையைவிட வியாபாரிகளிடம் அதிகமாக வசூல் செய்கிறார்கள்.
மேலும் காய்கள் வாங்க வருபவர்களிடம் நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதற்கான ஏலம் மார்ச் 20ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பரமன்விளையைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். ஆனால் ஏலம் நடைமுறை முழுமையாக நிறைவேற்றாமல் கடைக்காரர்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்துள்ளார்.
இதன்பின் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் களியக்காவிளை சந்தை கரோனோ ஊரடங்கின் காரணமாக தற்காலிகமாக களியக்காவிளை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு 80 தற்காலிக கடை அமைத்து விவசாயிகள் நேரடியாக வியாபாரம் செய்தனர்.
ஆனால் எவ்வித உரிமமின்றியும், ஏலம் எடுத்ததற்கான எவ்வித சான்றும் இல்லாமலும் வியாபாரிகளிடமிருந்து சதீஷ் குமார் கட்டணம் வசூலித்துள்ளார். மேலும் ஏலமானது களியக்காவிளை சந்தை, மீன் சந்தைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் எவ்வித உரிமமின்றி களியக்காவிளை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் கட்டணம் வசூல்செய்தது சட்டவிரோத செயலாகும்.
இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே களியக்காவிளை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளுக்கு கட்டணம் வசூல் செய்வதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டு மேலும் களியக்காவிளை காய், மீன் சந்தையில் முறையாக ஏலம் எடுத்ததற்கான சான்றுடன் பணம் வசூல்செய்வதை அலுவலர்கள் உறுதிசெய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.