கோயம்பேடு சந்தையில் தகுந்த விலகலை முறையாகக் கடைப்பிடிக்காத காரணத்தால், திருமழிசையில் கோயம்பேடு சந்தை மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு ( ஜூலை 9) பெய்த கனமழைக்கு சந்தை முழுவதும் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் கடைக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் உள்ளே வர முடியாமலும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் அனைத்தும் மழைநீரில் சிக்கிக் கொண்டன நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சிக்கிக்கொண்டதால் ஜேசிபி இயந்திரம் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
மேலும் பல்வேறு இடங்கள் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் வியாபாரிகள் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜெட் இயந்திரம் மூலம் மழை நீரை வெளியேற்றவும், நீர் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் தார் சாலையாக மாற்றப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார். இதனிடையே அங்குள்ள வியாபாரிகள் கூறுகையில், விவசாய நிலங்களில் ஏற்கனவே இந்தப் பகுதியில் காய்கறிகளை பாதுகாத்து வைக்க இடம் இல்லாததால் காய்கறிகள் விற்பனை ஆகாமல் டன் கணக்கில் கீழே கொட்டி வருவதாகவும், தற்போது மழையில் நனைந்து கீழே கொட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வியாபாரிகளின் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பகுதியில் முறையாக சாலைகளை சீர் அமைத்து செயல்பட வகை செய்ய வேண்டும். இல்லையென்றால் கோயம்பேடு சந்தை திறக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.