காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து, உணவு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் செவிலியர் கட்டிடத்தில் மேலும் கூடுதலாக 100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது 597 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் செவிலியர் கல்லூரியைக் கூடுதல் சிகிச்சை மையமாக மாற்றி மேலும் 100 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் செவிலியர்கள், சத்துணவு ஊழியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு வீடுகள் தோறும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையைக் கணக்கிட்டு அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கே. பழனி, மருத்துவமனை இணை இயக்குநர் மருத்துவர் ஜீவா, கண்காணிப்பாளர் கல்பனா, பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.