ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாகக் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியிலுள்ள குடியிருப்பில் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கதிரவன் கூறுகையில், ”நோய்த் தடுப்பு நடவடிக்கையாக ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் செயல்பட்டுவரும், மீன் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் கூட்டம் கூடி நோய்ப் பரவலுக்குக் காரணமாக வாய்ப்பிருப்பதால், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாள்களில் மீனை வெட்டாமல் முழு மீனாக மட்டுமே விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இறைச்சிக் கடைகளும் இனிமேல் இறைச்சியைப் பார்சலாக வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.