சென்னையில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் நாளை முதல் வரும் ஜூன் 30ஆம் தேதிவரை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தங்கி வேலைபார்க்கும் சிலர், தங்களது சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்துவருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இயக்குநர் சேரன் கோரிக்கை விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அய்யா, சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கரோனாவும் அதிகரிக்கும் நிலையில், வீட்டில் 90 நாள்களாக முடங்கிக்கிடப்பவர்களுக்கு, நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
15 நாள்களில் முடிந்துவிடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தங்கியவர்கள் நிறைய பேர், இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள், ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியிலிருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கும் அதன்மூலம் பரவும் அபாயம் இருக்கிறது.
சென்னையில் கரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி, சென்னையில் வாழும் நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும். அப்போது, சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:உதவி கேட்ட லாரன்ஸ் - சத்தமே இல்லாமல் உதவி செய்த பார்த்திபன்