நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், "ஈரான் நாட்டில் சிக்கியுள்ள குமரியைச் சேர்ந்த 685 மீனவர்களை மீட்பதில் ஈரான் நாட்டில் நிலவிவரும் உள்நாட்டுப் பிரச்னை காரணமாக கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக அவர்கள் வரும் 22ஆம் தேதி இந்தியக் கப்பலில் புறப்பட்டு வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி வந்தடைவார்கள்.
அதிமுக கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத குமரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில்தான் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இவ்வாறு திட்டங்களைக் கொண்டுவரும்போது அதனை எதிர்த்த திமுக எம்எல்ஏக்கள், தப்போது அந்தத் திட்டங்களை நாங்கள் தான் கொண்டுவந்தோம் எனக் கூறி அரசியல் நாடகம் ஆடுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, காவல் துறை உள்பட அனைத்துத் தரப்பினரும் எடுத்த நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக மாவட்டத்தில் கரோனாவால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை" எனக் கூறினார்.