சேலம்: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜி நேற்று இளைஞர் ஒருவரின் சரமாரியான கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அவசரகால சிகிச்சை தவிர புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரகாசம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழாய்வில் விளையாட்டுப் பொருட்கள் கண்டெடுப்பு - ஆய்வாளர் கூறுவதென்ன?
அப்போது அவர் கூறுகையில், “மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு தன்மையை அரசு உறுதிப்படுத்தவில்லை. மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கடுமையான சட்ட விதிகளை அரசு பின்பற்ற வேண்டும்.
இது போன்ற பிரச்சினைகள் எழும்போது மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை அப்போதைக்கு சரி செய்ய மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படுவதாக அரசாங்கம் கூறுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த முறையும் அவ்வாறு இல்லாமல் தமிழக அரசு , மருத்துவ சங்கப் பிரதிநிதிகளை அழைத்து ஒப்பந்தம் கையெழுத்திட்டு அதனை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் அப்போதுதான் மருத்துவர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக இருக்கும்,” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்