ரயில், பேருந்து பயணத்தின்போது கரோனா தொற்று அளகளவு பரவும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால், அத்தியாவசியம் இல்லாத பயணங்களைப் பொதுமக்கள் கைவிடுமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பயண கட்டண சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கில் நடைமேடை சீட்டு 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டைவிட கரோனா தொற்று குறுகிய காலத்தில் வேகமாகப் பரவி வருகின்ற நேரத்தில், தொற்று நோய் குறித்த அச்சம் காரணமாக பொதுமக்கள் பயணம் செய்வது குறைந்துள்ளது.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் மக்கள் பயணம் செய்வது குறைந்துள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு ஆகியவையும் பயணத்துக்கு இடையூராக அமைந்துள்ளது.
வழக்கமாக சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயிலில் இடம் கிடைக்காது. ஆனால் தற்போது பிரதான வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், ரயில் புறப்படும் நாள் வரை டிக்கெட்கள் காலியாக உள்ளன.
சில ரயில்களில் ரயில் புறப்படும்போது கூட இருக்கைகள் முன்பதிவு செய்ய முடிகிறது. வழக்கமாக இரவு நேர ரயில்களை மக்கள் அதிக அளவில் தேர்வு செய்வர். ஆனால் தற்சமயம் இரவு நேர ரயில்களும் காலியாகவே உள்ளன.
தொற்று அச்சம் காரணமாக தமிழ்நாடு மக்களின் பயணம் குறைந்துள்ள நேரத்தில், வேலையிழந்து, வருவாய் இழந்த வட மாநில புலம்பெயர் தொழிளாலர்கள் கூட்டமாகவும், குடும்பமாகவும் வெளி மாநிலங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது.
இதனால் மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்காக 45 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஹவுரா உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட்டுகளுக்காக காத்திருந்து பலரும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.