நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி கேபிட்டல்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து, 163 ரன் இலக்குடன் ஆடிய டெல்லி அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியாக ஆடினர். ரிஷப் பந்த் 49 ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை எடுத்திருந்தது.
இதனால், டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கலீல் அகமது வீசிய கடைசி ஓவரின் நான்காவது பந்தில் அமித் மிஸ்ரா (obstructing the field) என்ற விதிமுறையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, அணியின் வெற்றிக்கு இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், கீமோ பவுல் பவுண்டரி விளாசினார். இதனால், டெல்லி அணி இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 56, ரிஷப் பந்த் 49 ரன்களை அடித்தனர். ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ரஷித் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், டெல்லி அணி நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.