தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி, அடவிநயினார் அணை, ராமநதி, கருப்பாநதி ஆகிய 4 அணைகளில் உள்ள கீழ் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு நடப்பாண்டு கார் சாகுபடி தண்ணீர் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 8 ஆயிரத்து 225.46 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுவதற்காக நேற்று (ஆகஸ்ட் 21) முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை 97 நாள்களுக்கு மேற்கண்ட நான்கு நீர் தேக்கங்களில் இருந்து நீர் திறந்துவிட அனுமதி அளித்தார்.
அதன்படி, கடனா நதி நீர்த்தேக்கம் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேக்கரை அடவி நயினார் நீர்தேக்கம் மூலம் மூலம் 2 ஆயிரத்து 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ராமநதி, கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து தலா ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் தொடக்க நிகழ்வாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் கருப்பாநதி அணையை திறந்து வைத்தனர்.