உத்தரப் பிரதேசம் அம்ரோகா மாவட்டம் டோன்கேரா கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதான விகாஸ் ஜாதவ். இவர் அப்பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்றுள்ளார். ஆனால், சிறுவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி அங்கிருந்த இளைஞர்கள் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.
அதையும் மீறி சிறுவன் கோயிலுக்குள் சென்றதால் இளைஞர்கள் அந்தச் சிறுவனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், வீட்டிற்குச் சென்ற சிறுவன் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, லாலா சவுகான், ஹோராம் சவுகான், ஜஸ்வீர், பூஷண் ஆகிய நான்கு பேரும் அவரது வீட்டிற்கு வந்து சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவனின் தந்தை ஓம் பிரகாஷ் ஜாதவ் கூறுகையில், "துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு, நாங்கள் விகாஸைக் காப்பாற்ற விரைந்தோம். அந்த நேரத்தில் நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர், விகாஸை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்துவிட்டான்" எனத் தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.