உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நாட்டிங்ஹாமில் இன்று நடைபெற்றுவரும் தொடரின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
இருப்பினும் அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்களான பாபர் அசாம் (22), ஹாரிஸ் சோஹைல் (8), கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத்(8), முகமது ஹஃபிஸ் (16) என்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், பெவிலியனுக்கு வரிசையாக நடையைக் கட்டினர். இறுதியில், பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களிலேயே 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஒஷானே தாமஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அதிகமான ரன்களை குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களோ ஆட்டம் தொடங்கிய இரண்டு மணிநேரத்திற்குள் ஆட்டமிழந்தனர். இவர்களது ஆட்டத்தைக் கண்ட நெட்டிசன்கள், என்னடா கந்துவெட்டி கோவிந்தா... நீ என்னமோ பெரிய ஆளுனு நினைச்சா... இப்படி பொசுக்குன்னு அவுட்டாகிட்டயே... என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.