கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள மருதாடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (26) . இவர் மருதாடு பகுதியிலிருந்து கடலூர் நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
இதேபோல் பண்ருட்டி ஏபி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (22), கணிசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கயல்விழி (18) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் நெல்லிக்குப்பம் அருகே உள்ள தோட்டப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது கண்ணிமைக்கும் நொடியில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அறிவழகன், கயல்விழி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவித்த நிலையில், கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அறிவழகன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கயல்விழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.