சீனா, பாகிஸ்தான் பொருளாதார பாதை எனும் சிபிஇசி திட்டப் பணிகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று (ஜூலை 3) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், "நமது நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு சிறந்த திட்டமாக சிபிஇசியை நாங்கள் கருதுகிறோம். பிரமாண்டமான பன்முக முயற்சிகள் தேசத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும்.
சிபிஇசி திட்டத்திற்கான பாகிஸ்தானின் அதிகாரசபையின் செயல்திறனை நாடே பாராட்டும். மேலும், அதன் செயல்பாட்டையும் திறனையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய சீனா, பாகிஸ்தான் பொருளாதார பாதையின் மொத்த மதிப்பீடு 62 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
இப்பொருளாதார பாதை பாகிஸ்தானின் உள் கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமான பொருளாதார உறவை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. பாகிஸ்தானில் 2015ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இத்திட்டத்தால் ஏறத்தாழ 7,00,000 நேரடி வேலை வாய்ப்புக்கள் உருவாகும். 2-2.5 விழுக்காடு ஆண்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
சிபிஇசி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உள்கட்டுமான திட்டங்கள் பாகிஸ்தானின் முழு நீளத்திற்கும் செயல்படுத்தப்படும். இது தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள குவடார் நகரை சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான சின்சியாங்கை பல நெடுஞ்சாலைகள் இருப்புப் பாதைகள் வழியே இணைக்கிறது.
சிபிஇசி திட்டத்தின் ஒரு பகுதியாக கராச்சி - லாகூர் இடையேயும், இராவல்பிண்டியிலிருந்து காரகோரம் இடையேயும் நெடுஞ்சாலை அமைக்கப்படும். கராச்சி - பெசாவார் இருப்புப் பாதையுடன் சீனாவின் தென் சின்சியாங்கு இருப்புப் பாதையை இணைப்பதும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். திரவ எரிவாயு முனையம் அமைப்பதற்கும், மின்சார பற்றாக்குறையை நீக்குவதற்காக மின்கடத்தி வடம் அமைக்கவும் 4 மில்லியன் அமெரிக்க டாலரை சீன அரசு ஒதுக்கியது.
இதனால், உலக சந்தையில் பாகிஸ்தான் வேகமாக முன்னேறும். இதனால் பாகிஸ்தானின் சாலை, வானூர்தி, இருப்புப் பாதை, துறைமுக சேவைகள் மேம்படும். மின்பற்றாக்குறை தீர்ந்து தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த பொருளாதார பாதையை காக்கும் பொறுப்பை சீன கடற்படைகள் ஏற்றுள்ளன. இதன் பொருட்டு டிஎப்-88 என்ற சிறப்பு படையை சீனா உருவாக்கியுள்ளது" என்றார்.