கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அரசு சார்பில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் வேலூர் மாவட்டத்தில் தீவிரமாக உள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், நாளுக்கு நாள் அங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை வேலூரில் 47 பேர் பாதிக்கப்படும், ஒருவர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 பாதிப்பை கண்டிராத பகுதியாக அறியப்பட்டுவந்த குடியாத்தம் பகுதியில் இன்று ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த நபர் சென்னையில் இருந்து குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கிராமத்திற்கு வருகை புரிந்துள்ளவர் என அறிய முடிகிறது. இதைத்தொடர்ந்து, அவர் வேலூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அவருடைய குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்தோர் என அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர் வசித்து வந்த பகுதிக்குள் வெளியாட்கள் யாரும் செல்லாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடியாத்தம் கல்லப்பாடியில் ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.