கடலூர் மாவட்டம் காவனூர் பைத்தான்பாடி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் பாவாடை (65). இவர் விழுப்புரம் சரக துணைத் தலைவர் சந்தோஷ் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், “நான் ஒரு விவசாயி. எனக்குச் சொந்தமாக இரண்டு கறவை மாடுகளை வைத்து ஜீவனம் செய்து வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு பாண்டிச்சேரி தவளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (33), அவருடைய கணவர் செல்வகுமார் (37) மற்றும் பைத்தம்பாடியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து ஆராபால் குளிரூட்டும் கம்பெனி தொடங்கினர். அவர்கள் எங்களை அணுகி கம்பெனிக்கு பால் சப்ளை செய்யும்படி கேட்டனர்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பெனிக்கு பால் சப்ளை செய்தேன். பால் சப்ளை செய்த பத்து நாள்களுக்குப் பிறகு பணம் பட்வாடா செய்துவிடுதாகக் கூறினர். பத்து நாள்களுக்குப் பிறகு, பால் சப்ளை செய்ததற்காக அவர்களிடம் 24 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டேன். அவர்கள் பணம் தராமல், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும், என்னைப் போல் மொத்தம் 70 பால் முகவர்களிடம் பணம் கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றியுள்ளனர். எங்கள் எல்லோருக்கும் மொத்தமாக 32 லட்சத்து 17 ஆயிரத்து 924 ரூபாய் அவர்கள் தர வேண்டும். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட விழுப்புரம் சரக துணைத் தலைவர் சந்தோஷ் குமார், அதன்மீது நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரம் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் விக்ரமன், அன்பழகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பரமணி, சரவணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பால் முகவர்களிடமிருந்து 32 லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடி செய்த சுதா, செல்வகுமார் தம்பதியை இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பன்னீர்செல்வத்தைத் தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட தம்பதியிடமிருந்து பதினோரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.