நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கள் கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். 500 குவிண்டால் வரை விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியை வைக்க குடோன் வசதி உள்ளது.
விவசாயிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இந்திய பருத்தி கழகம் அலுவலர்கள் தனியார் வியாபாரிகள் கலந்துகொண்டு மறைமுக ஏலத்தில் விலை நிர்ணயம் செய்து பருத்தியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த வருடம் பருத்தி சாகுபடி மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் அதிக அளவில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற பருத்தி எலத்தில் 1400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நான்காயிரம் குவிண்டால் பருத்தியை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்போது பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் விவசாயிகள் பருத்தியை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வாயில் வரை அடுக்கி வைத்தனர்.
இந்திய பருத்தி கழகம் அலுவலர்கள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5550 ரூபாய் விலை நிர்ணயம் செய்தனர்.
இதனிடையே, நேற்று மாலை திடீரென்று பெய்த 10 நிமிடம் மழையில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள் நனைந்தது.
இதையடுத்து இந்திய பருத்தி கழகம் அலுவலர்கள் ஆயிரம் குவிண்டால் பருத்தியை மட்டுமே ஏலத்தில் எடுத்து சென்றனர்.
மீதமிருந்த 3000 குவிண்டால் பருத்தி மூட்டைகளை தனியார் வியாபாரிகள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூபாய் 4700 முதல் குறைந்தபட்சம் ரூ. 3300 வரை ஏலத்தில் எடுத்தனர்.
குடோன் வசதி இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த தரமான பருத்தி மழையில் நனைந்த தாகவும் தங்கள் பருத்தியை இந்திய பருத்தி கழக அலுவலர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கொள்முதல் செய்த பருத்திகளை எடைபோட்டு வியாபாரிகளால் எடுத்து செல்ல முடியவில்லை.
இந்நிலையில் பருத்தியை விற்காமல் திருப்பி எடுத்து சென்றால் நஷ்டம் ஏற்படும் என்று பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய சம்மதித்ததால் விவசாயிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குடோன் வசதி இல்லாததால் தரமான பருத்திகளை குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
மேலும் பருத்தியை பாதுகாப்பாக வைக்க ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குடோன் வசதி செய்து தந்தால் மட்டுமே விவசாயிகள் லாபம் அடைய முடியும் என்று வேதனையுடன் கூறினார்.
இதையும் படிங்க: ஜெயராஜ், பென்னிக்சை விடிய விடிய அடித்ததாக தலைமை காவலர் வாக்குமூலம்