வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று உயிரிழந்தார். ஆகையால் இத்தொகுதியில் உறுப்பினரை நிரப்ப இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு (FLC) பணிகளைச் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் இன்று (ஜூலை 20) காலை அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் சரிபார்க்கப்பட இருந்தது.
இந்நிலையில், இயந்திரம் சரிபார்ப்புப் பணிக்காக கொல்கத்தாவிலிருந்து வந்த நான்கு பொறியாளர்கள் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் லோகேஷ் என்ற பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் வந்த மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று நடைபெறவிருந்த வாக்கு இயந்திரம் முதல் நிலை சரிபார்ப்புப் பணியானது ரத்துசெய்யப்பட்டு அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இயந்திரம் சரிபார்ப்புப் பணி நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.