திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிழக்கு ரத வீதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 30 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி சில செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு விடுதியில் தங்கி பணியாற்றிவரும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பகுதியை சேர்ந்த செவிலியர், கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 நாட்களாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனது தங்கையின் பிரசவத்திற்காக உடன் இருந்துவிட்டு மீண்டும் பணிக்கு அவிநாசி வந்துள்ளார்.
இதையடுத்து இவருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவு இன்று (ஜூலை 8) வெளிவந்த நிலையில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையின் இரண்டு கட்டடங்களும் மூடப்பட்டது. கரோனா தொற்று காரணமாக உள் நோயாளிகள் அனுமதிக்கப்படாததால், நோயாளிகள் யாரும் இல்லை. சுகாதாரத் துறையினர் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொண்டனர்.
மேலும், செவிலியர் தொடர்பில் இருந்த மருத்துவமனை பணியாளர்கள் 30 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு ரத வீதி முழுவதும் ஒருவாரத்திற்கு அடைக்கப்பட்டு கடைகள் திறக்கக்கூடாது என சுகாதாரத் துறையினர் அறிவித்தனர். நகரின் மையப்பகுதியிலேயே தொற்று ஏற்பட்டதால் அவிநாசி பொதுமக்கள் மத்தியில் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.