திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேபோல் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வட மாநிலத்திற்குச் செல்லும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டுவந்த திருவள்ளூர் துணை வட்டாட்சியர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் இவர்கள் இருவருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.
இதனையடுத்து இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியதின் பேரில் இருவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
மேலும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முழுமையாகச் சுத்தம்செய்து மூடப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் என வட்டாட்சியர் விஜயகுமாரி தெரிவித்தார்.