காரைக்காலில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காரைக்காலில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் இயங்கி வரும் காமராஜர் வளாகத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காமராஜர் வளாகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றிய மாவட்ட நிர்வாகம், நகராட்சி ஊழியர்களைக் கொண்டு வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, காமராஜர் வளாகத்தை மாவட்ட நிர்வாகத்தினர் இழுத்து மூடினர். இதனிடையே, தொற்று ஏற்பட்ட அரசு ஊழியருக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை காரைக்காலில் 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.